Monday, February 23, 2009

கொஞ்சம் கிறுக்கல் 4

உன்னை தேடும்போது
கண்களில் படாது,
எதிர்பாராத தருணங்களில்,
நீ எதிரே வரும் பொழுது
செய்வதறியாது சட்டென்று தடுமாறும்
நான்..

----------------------------------------------
தடுமாறும் சில கணங்களில்
கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
சாமர்த்தியமாக பதில் உரைத்து,
நீ கண் சிமிட்டுகையில்..
அசந்து நிற்கும்
நான்..

----------------------------------------------
கண் சிமிட்டும் நொடியில்
சின்னஞ் சிறு விழிகளில் இருந்து
பறந்து செல்லும் பத்து லட்சம்
மின்மினிகளை....
சிறு புன்னகையுடன் ரசிக்கும்
நான்..

----------------------------------------------
புன்னகை பூ அவள்..
புயலையும் பூந்தென்றலாய்
மாற்றி விடும் அசாத்தியம்..
எரிமலையையும் கலங்காது
எதிர்கொள்ளும் தீரம்..
வியந்து வியந்து விழி மூடி
போர்வையாய் நினைவுகளை போர்த்தும்
நான்..

----------------------------------------------
மூடிய விழிகளின் நடுவில்
நீக்கமற நிறைந்து இருக்கும்
நினைவுகளை,
கூட்டை சுமந்து செல்லும்
சிறு நத்தை போல சுமக்கும்
நான்....

----------------------------------------------
பனி துளிகளின் இடையே
எதையோ தேடி செல்லும்
நத்தை போல,
அனுதினம் உன்னை தேடும்
அன்றில் பறவையாய்
நான்..

----------------------------------------------
இது கிறுக்கல் அல்ல.. ஒரு இளமனதின் மெல்லிசை..

1 comment: