Monday, July 26, 2010

ஒரு அதிகாலை கனவு


ஒரு சில்லென்ற இளங்காலை பொழுது..
பனியில் குளித்த பச்சைப் புல்வெளி..
குடத்தில் தண்ணீர் ஊற்றும் ஒரு கற்சிலை..
அதன் ஓரமாய் வெளிர் மஞ்சள்
நிற புடவையில் அமைதியாய் அவள்..
இளம் ஆரஞ்சு வண்ண ரோஜாக்கள்
சேர்ந்த பூங்கொத்தை மறைத்து
அவள் முன்னே புன்னகையுடன் நான்..
சற்றே தலை சாய்த்து குருஞ் சிரிப்புடன்
ஆர்வத்துடன் அவள் பார்க்க..
திடீரென ஒரு குரல்..
"அம்மா.. பால்",
அடச்சே! பக்கத்துக்கு வீட்டிற்கு பால் ஊற்றும்
பையன் வழக்கம் போல இன்று
என் கனவுக்கும் பால் ஊற்றிச் சென்றான்..

Monday, July 19, 2010

ஒரு மாலை நேரம்..


ஒரு முன்பனி காலை நேரம்
வானம் மெலிதாய் தூறல் போட,
சற்று நேரம் முன்பு மலர்ந்த
ரோஜா வாசம் மெதுவாய் தீண்ட,
அலுவலகம் விரைந்து செல்லும்
மனிதர்களை சற்றே கடந்து
சாலையில் நடந்து செல்லும் போது
திடீரென்று பாய்ந்து வந்தவன்
சலனமின்றி கேட்டுச் சென்றான்
"என்ன வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"

Friday, May 14, 2010

என்னை போல் ஒருவன்


காலை நேர கூட்ட நெரிசலில்
தோளில் மடிக்கணினி சுமந்து,
நடத்துனரிடம் ஒரு ரூபாய் சில்லறைக்கு
ஒன்பது நிமிடம் சண்டையிட்டு,
அலுப்போடு அலுவலகம் சென்று
பிடிமானம், வருமான வரி என
மாதம் ஒரு முறை சம்பள பட்டியலில்
சில ஆயிரம் ரூபாய்கள்
கேள்வி எதுவுமின்றி
வரி செலுத்தும் அவனை
பார்த்ததும் கண்டுகொண்டேன்..
இவன் என்னை போல் ஒருவன்.
அவனை அழைத்து சொல்ல வேண்டும் - "நீ என் இனமடா!"

Thursday, May 13, 2010

மெல்லிய அதிர்வு மட்டும்


சற்றும் சலனமில்லாத முகம்.
எங்கோ எதையோ தேடும்,
குறுகுறு கருவிழிகளில்,
இனம் புரியா ஒரு ஈர்ப்பு.
பார்வை என் மீது விழுந்ததும்,
சிலநொடி நிலை குத்தி நிற்க,
என்னவென்று வர்ணிக்க
அந்த மின்மினி குருநகையை..
மின்னல் எதுவும் தெறிக்கவில்லை..
வண்ணத்து பூச்சி எதுவும் வட்டமிடவில்லை..
சிறு மெல்லிய அதிர்வு மட்டும்..
இதயத்தின் மையத்தில் இதமாக..