Monday, February 23, 2009

கொஞ்சம் கிறுக்கல் 4

உன்னை தேடும்போது
கண்களில் படாது,
எதிர்பாராத தருணங்களில்,
நீ எதிரே வரும் பொழுது
செய்வதறியாது சட்டென்று தடுமாறும்
நான்..

----------------------------------------------
தடுமாறும் சில கணங்களில்
கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
சாமர்த்தியமாக பதில் உரைத்து,
நீ கண் சிமிட்டுகையில்..
அசந்து நிற்கும்
நான்..

----------------------------------------------
கண் சிமிட்டும் நொடியில்
சின்னஞ் சிறு விழிகளில் இருந்து
பறந்து செல்லும் பத்து லட்சம்
மின்மினிகளை....
சிறு புன்னகையுடன் ரசிக்கும்
நான்..

----------------------------------------------
புன்னகை பூ அவள்..
புயலையும் பூந்தென்றலாய்
மாற்றி விடும் அசாத்தியம்..
எரிமலையையும் கலங்காது
எதிர்கொள்ளும் தீரம்..
வியந்து வியந்து விழி மூடி
போர்வையாய் நினைவுகளை போர்த்தும்
நான்..

----------------------------------------------
மூடிய விழிகளின் நடுவில்
நீக்கமற நிறைந்து இருக்கும்
நினைவுகளை,
கூட்டை சுமந்து செல்லும்
சிறு நத்தை போல சுமக்கும்
நான்....

----------------------------------------------
பனி துளிகளின் இடையே
எதையோ தேடி செல்லும்
நத்தை போல,
அனுதினம் உன்னை தேடும்
அன்றில் பறவையாய்
நான்..

----------------------------------------------
இது கிறுக்கல் அல்ல.. ஒரு இளமனதின் மெல்லிசை..

Tuesday, February 17, 2009

கொஞ்சம் கிறுக்கல் 3

பகலை விட
நிலவொளியில் தாஜ்மஹால்
மிக அழகாக தெரியுமாம்..
அந்தி சாய்ந்த ஒரு பொழுதில்,
அலைபேசி திரைஒளியில்,
உன் அழகுமுகம் கண்ட பிறகு
நம்பாமல் இருக்க முடியவில்லை..

----------------------------------------------
வண்ண கோல போட்டிக்கு
நீ கோலமிடுகையில்
உன்னை கண்ட பிறகு,
கோலம் மெதுவாக சொன்னது,
"இதுதான் கோலமயில் போல"
----------------------------------------------
நான் கவிதை சொல்லும்போது
கதை கேக்கும் சுட்டி சிறுமி போல
கண் சிமிட்டாது பாக்கிறாய்..
அது வரை தள்ளி நின்ற கவிதைகள்
என்னை நோக்கி ஓடி வருகின்றன..
----------------------------------------------
எல்லோரிடமும் சிறிது பேசும் நீ,
என்னை கண்டதும் மௌனமாகும்போது
கண்ணுக்கு புலப்படாத,
எதோ ஒன்று நம்மை பார்த்து,
சிரிக்க தொடங்குகிறது..
அது என்னவென்று..
உனக்கும் தெரியவில்லை..
ஏன் சிரிக்கின்றது என்று
எனக்கும் புரியவில்லை..

----------------------------------------------

Thursday, February 5, 2009

கொஞ்சம் கிறுக்கல் 2

நந்தவனத்தில் நீ
உலா வருகையில்
எங்கிருந்து வந்தது இந்த
'புதிய வகை மலர்' என்று
வண்ணத்து பூச்சிகள் குழம்பியது
பாவம் உனக்கு தெரியாது..
உன் மேல் பொறாமை கொண்ட
அந்த மலர் கூட்டத்துக்கு
நிச்சயம் தெரிந்து இருக்கும்..
----------------------------------------------
தினம் காலையில்
நீ பறிக்க காத்திருக்கும்
அந்த சிறு மஞ்சள் மலர்கள்
என்ன தவம் செய்து இருக்கும்?
----------------------------------------------
இலவம் பஞ்சு நீ..
ஆனால் உன்னை காணும்போது
பற்றிக் கொள்வதென்னவோ
என் இதயம் தான்..
----------------------------------------------
உன்னை சந்திக்கும்போது..
கவிதைகள் உதடு வரை வந்து
உன் செவி சேராமலே,
என்னை திட்டி, காற்றில் கரைவதை
அறிவாயா நீ?

----------------------------------------------
என்ன வைத்திருக்கிறாய் உன் கண்களில்..
காந்தமா? இல்லை கதிர்வீச்சா?
கவர்ந்து இழுத்து
கவிழ்த்து விடுகிறதே..
----------------------------------------------